×

நத்தநல்லூர் கிராமத்தில் அமைத்த கழிவுநீர் கால்வாயை காணவில்லை: கலெக்டரிடம் வழக்கறிஞர் புகார்

காஞ்சிபுரம், பிப்.5: காஞ்சிபுரம் மாவட்டம் நத்தாநல்லூரில் கழிவுநீர் செல்வதற்காக கட்டப்பட்டதாக கூறப்படும் கால்வாயை காணவில்லை என கலெக்டர் பொன்னையாவிடம், அதே கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் நத்தாநல்லூர் கிராமத்தில் திருவள்ளுவர் தெரு உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பத்திர் வசிக்கின்றனர். இந்தத் தெருவின் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக வீட்டில் இருந்து வெளியேற்றும் தண்ணீர், மனிதக் கழிவுகள் கலந்த அசுத்தநீர் ஆகியவற்றை சாலையில் விடுகின்றனர்.இதுபோல், வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தெருவில் குளம்போல் தேங்கி, சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு மேலாக ஆறாக வழிந்தோடுகிறது. இதனால் இந்த தெரு சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதையொட்டி குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் அனைவரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் சில குடும்பத்தினர் சாலையை ஒட்டி சிமென்ட் தொட்டியை, கட்டி நீரை தேக்கி வைப்பதால் டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயமும் உள்ளது.இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இணையவழியில் புகார் அளித்திருந்தேன். அதன் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர், மேற்கண்ட தெருவை நேரில் ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து கொண்டு தற்காலிக கால்வாய் அமைப்பதாகக் கூறினார்.

ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் புகார் மனுவின் விவரத்தை இணையதளத்தில் பார்த்தேன். அதில், சாலையினை சர்வே செய்து கால்வாய் அமைக்க பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். சர்வே செய்ய சர்வேயருக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது என வட்டார வளர்ச்சி அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு கணக்கில் உள்ள சாலையை அளக்க சர்வேயருக்கு பணம் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால், பணம் செலுத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜனவரி 30ம் தேதி, இணையதளத்தில் பார்த்தேன். அப்போது, நத்தாநல்லூர் ஊராட்சியில் 150 குடியிருப்புகள் கொண்ட திருவள்ளுவர் தெருவில் கழிவுநீர் சாலையில் செல்லாமல் இருக்க இருபுறங்களிலும் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சாலை வசதியை மேம்படுத்த 2019 - 20ல் நிதி வந்தவுடன் முதல் பணியாக எடுத்துச் செய்யப்படும் எனவும் பதில் அளிக்கப்பட்டிருந்தது.நத்தாநல்லூர் திருவள்ளுவர் தெருவில் சல்லடை போட்டு தேடிப் பார்த்தும் கால்வாயைக் காணவில்லை. வழக்கம்போல ஆக்கிரமிப்பாளர்களால் சாலையை இழந்து, சாலை முழுவதும் சாக்கடைக் கழிவுகளால் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது.எனவே, கடந்த ஜனவரி 10ம் தேதி கழிவுநீர் சாலையில் செல்லாமல் இருக்க இருபுறங்களிலும் வெட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை கண்டுபிடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : village ,collector ,lawyer ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...